மத்திய சென்னை பிரதான சாலைகளில் உள்ள சிக்னல், சிசிடிவி கேமராக்களை உடனே சரி செய்ய வேண்டும்

சென்னை போலீஸ் கமிஷனருக்கு தயாநிதி மாறன் எம்பி கோரிக்கை

சென்னை: மத்திய சென்னை பிரதான சாலைகளில் உள்ள பழுதடைந் துள்ள சிக்னல், சிசிடிவி கேமராக்களை உடனே சரி செய்ய வேண்டும், என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு தயாநிதி மாறன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அண்ணாசாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் சரிவர இயங்காத காரணத்தினால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் நடைபெறும் விபத்துகள் குறித்தும், போக்குவரத்து நெரிசல் குறித்தும் நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தினசரி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும், மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக அண்ணாசாலை பல வருடங்களாக ஒரு வழிப்பாதையாக இருந்ததால், சிக்னல் இல்லாதது ஒரு ெபரிய இடையூறாக இல்லை. ஆனால், தற்போது இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, முக்கிய சந்திப்புகளான டேம்ஸ் ரோடு சந்திப்பு, ஜெனரல் ேபட்டர்ஸ் ரோடு சந்திப்பு, ஸ்மித் ரோடு சந்திப்பு, ஒயிட்ஸ் ரோடு சந்திப்பு, பீட்டர்ஸ் ரோடு சந்திப்பு, டிஎம்எஸ் சந்திப்பு மற்றும் ஜெ.ஜெ.ரோடு, டி.டி.கே.ரோடு ஆகிய பகுதிகளில் அவ்வப்போது போக்குவரத்து சிக்னல்கள் சரிவர இயங்காததால், நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் குறிப்பிட்ட இடத்தை கடக்க பல மணி நேரம் ஆகிறது.

எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பாக அலுவலக நேரங்களில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களை தவிர்க்கும் பொருட்டு மேலே குறிப்பிட்டுள்ள பிரதான சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலை சரி செய்து, அங்கு வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை உடனடியாக பழுது பார்த்திட வேண்டும் என பொதுமக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: