ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை:உபி போலீசார் திடீர் அறிவிப்பு: காயங்களால் இறந்ததாக தகவல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 4 பேர் கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததாக கூறப்படும் ஹத்ராஸ் இளம்பெண், பாலியல் பலாத்காரமே செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி திடீரென காணாமல் சென்றார். பின்னர், உடல் முழுவதும் காயங்களுடன் நாக்கு துண்டிக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கவலைக்கிடமாக கண்டெடுக்கப்பட்டார். அலிகாரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அவருடைய உடல்நிலை மோசமானதால் டெல்லியில் உள்ள சப்தர்ஜிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கும் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை  உயிரிழந்தார். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.  இந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என அனைத்து கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இளம்பெண்ணின் சடலத்தை, நேற்று முன்தினம் இரவே அவருடைய குடும்பத்தினரிடம் கூட கூறாமல், போலீசார் அவசர அவசரமாக எரித்து விட்டனர்.

இது, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் இச்செயல் பெரும் சந்தேகத்தை அளித்தது. அவர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், உபி போலீசார் நேற்று பெரிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டனர். ஹர்தராஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரந்த் வீர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஹர்தராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரமே செய்யப்படவில்லை. அலிகார் மருத்துவக் கல்லூரி மருத்துவனையின் அறிக்கையில், இளம்பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதாக மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது, அவர் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. தடய அறிவியல் அறிக்கையில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது,’’ என்றார்.

அதேபோல், இம்மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் அளித்த பேட்டியில், ‘‘காயங்கள் காரணமாகவே ஹத்ராஸ் இளம்பெண் இறந்துள்ளார். அவருடைய கழுத்தில் பலத்த காயங்கள் உள்ளன. உடலிலும் சில எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான காயங்கள் காரணமாகவே அவர் இறந்துள்ளார். அவருடைய வயிற்றுக்குள் விந்தணுக்கள் எதுவுமில்லை என்பதை தடய அறிவியல் அறிக்கை உறுதியாக தெரிவிக்கிறது. அப்பெண் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்திலும், தான் தாக்கப்பட்டதாகவே கூறியிருக்கிறார். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும், சாதி மோதலை ஏற்படுத்தவும் யாரோ சிலரால், தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் இதுபோன்ற தவறான தகவல்களை நம்பக் கூடாது,’’ என்றார்.

ஏன் இந்த அவசரம்? டிஜிபி.க்கு நோட்டீஸ்

தேசிய பெண்கள் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், `ஹத்ராஸ் இளம்பெண்ணின் இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதற்காக, சடலத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் அப்பெண்ணின் குடும்பத்தினர் கேட்ட போதிலும், போலீசார் அவசர அவசரமாக இரவில் சடலத்தை எரித்து விட்டனர். அவரது உடலை இரவோடு இரவாக, அவசரமாக எரிக்க வேண்டிய காரணம் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க கோரி உபி டிஜிபி., மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

ஆட்சியை கலைக்க வேண்டும்

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான  குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சட்டம், ஒழுங்கு சீர்  கெட்டுவிட்டது. எனவே, மத்திய அரசு யோகி ஆதித்யநாத்துக்கு பதிலாக, தகுதி  வாய்ந்த ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும். இல்லையெனில், ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி  ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஒரு தாயின் கருவில் இருந்து பிறந்த நீங்கள்,  மற்றவர்களின் சகோதரி, மகள்களை உங்களின் சகோதரி, மகளாக கருத வேண்டும்.  அவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து  விடுங்கள்,’’ என்றார்.

சீதையை போல் தீயிலிடப்பட்டார்

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ``அக்னி பரிட்சையில் சீதை தீயிலிடப்பட்டதை போல, உ.பி.யில் பலாத்காரம் செய்யப்பட்ட ஹத்ராஸ் பெண்ணும் தீயிலிடப்பட்டு உள்ளார். மேற்கு வங்கத்தில் இதுபோன்ற குற்ற சம்பவம் நடந்த 72 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,’’ என்று பேசினார்.

டெல்லி எய்ம்சுக்கு பரிந்துரைத்த நிலையில் சப்தர்ஜங்கில் சேர்த்தது எப்படி? அலிகார் மருத்துவமனை முதல்வர் அதிர்ச்சி

ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண், அலிகாரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் முதலில் சிகிச்சை பெற்றார். அவரை மேல் சிகிச்சைக்காக கடந்த 28ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பும்படி இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால், அவர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து இந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஷாகித் அலி சித்திக் கூறியதாவது:

வழக்கமாக, மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது பற்றி மருத்துவர்களே முடிவு எடுப்பார்கள். ஹத்ராஸ் இளம்பெண்ணை பொருத்தவரை, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் விருப்பப்படியே, அவரை டெல்லி கொண்டு  செல்ல சம்மதித்தோம். டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆனால், அவரை ஏன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர் என்பது  புரியவில்லை. இது தொடர்பான அறிக்கையை புலன் விசாரணை அதிகாரிகளிடமோ அல்லது நீதிமன்றத்திலோ சமர்ப்பிக்க மட்டுமே எங்களுக்கு அதிகாரம் உள்ளது. அவரை ஏன் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர் என்பதற்கு ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகத்தால் மட்டுமே பதிலளிக்க முடியும். எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உபி.யில் மற்ெறாரு இளம்பெண் பலாத்காரம்

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம், பலி சம்பவத்தால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அடங்குவதற்குள், உத்தர பிரதேச மாநிலம், பல்ராம்பூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மற்றொரு 22 வயது இளம்பெண்ணும் நேற்று முன்தினம் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தர பிரதேச மாநிலம், பல்ராம்பூர் அருகே நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற, தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அத்துடன் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளது. இந்த சம்பவம் ஹத்ராஸ் இளம்பெண் இறந்த அதே செவ்வாய்க் கிழமை நடந்துள்ளது.

பலத்த காயமடைந்த அப்பெண் லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. பெண்ணின் தாயார் கூறுகையில், எனது மகள் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரியில் சேர விண்ணப்பிக்க சென்றார். வழியில் அவரை கடத்திய 4 பேர் கும்பல், அவர்களின் அறைக்கு தூக்கிச் சென்று போதை ஊசி செலுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, எனது மகளின் கால் முறிக்கப்பட்டு இருந்தது. அவரால் நடக்கவும், பேசவும் முடியவில்லை,’’ என்று கூறினார்.

Related Stories:

>