தங்கம் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ். அதிகாரி சிவசங்கருக்கு சம்பளத்துடன் ஓராண்டு விடுப்பு: தகவல் வெளியானதால் உத்தரவு வாபஸ்

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஒரு வருடம் விடுமுறை அளிக்க உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சொப்னாவுடன் கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளரும் ஐடி துறை செயலாளருமாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரிடம் சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் பலமுறை விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் முடிவில் இவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலகட்ட விசாரணைக்கு பின்னர் அவரை அதிகாரிகள் விடுவித்தனர். இவர் மீது புகார் கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூலை 7ம் தேதி இவர் முதல்வரின் முதன்மை செயலாளர் மற்றும் ஐடி துறை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர், ஜூலை 17ம் தேதி  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கு இடைபட்ட காலத்தில், இவர் தனக்கு ஒரு வருடம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசிடம் விண்ணப்பித்தார்.

இவரது விண்ணப்பத்தை பெற்று பரிசீலனை செய்த கேரள அரசு, ஜூலை 22ம் தேதி அவருக்கு ஒரு வருட விடுமுறை அளித்து உத்தரவிட்டது. அதாவது, ஜூலை 7ம் தேதி முதல்  2021 ஜூலை 6ம் தேதி வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒருவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது சட்ட விரோதமாகும். ஆனால், சட்டத்தை மீறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, உடனடியாக அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்த தகவல் இப்போதுதான் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>