16ம்தேதி நவராத்திரி பிரமோற்சவம் தொடக்கம் மாடவீதிகளில் ஏழுமலையான் பவனி: பக்தர்களுக்கு அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தில் சுவாமி நான்கு மாடவீதிகளில் பவனி வருவார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. வழக்கமாக பிரமோற்சவத்தில் மலையப்பசுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக வீதி உலா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தெலுங்கு பஞ்சாங்கத்தின்படி 3ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பதி கோயிலில் 2 பிரமோற்சவம் நடத்துவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு 2வதாக நவராத்திரி பிரமோற்சவம் வரும் 16ம்தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரமோற்சவத்தில் சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். இதில், ரூ.300 கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்து்ள்ளது. பிரம்மோற்சவத்தின்போது காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 9 மணி வரையும் தரிசிக்கலாம். பிரமோற்சவத்தின் 6ம் நாள் (அக்.21ம் தேதி) மாலை புஷ்ப பல்லக்கு, 23ம்தேதி தங்க ரதத்தில் சுவாமி வீதி உலா, 24ம்தேதி தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சம் நிறைவு பெற உள்ளது.

மாட வீதியில் பக்தர்களை அனுமதிப்பதற்கு முன்னதாக உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்படும். மேலும் வீதி உலா காண வரும் பக்தர்களுக்கு அன்னபிரதாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும்,  பாபவிநாசம் சாலையில் உள்ள கல்யாண மேடை அருகே புகைப்படம் , மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related Stories: