ராகுல் காந்தியை தாக்கி கைது செய்த உ.பி.காவல் துறை தமிழகம் முழுவதும் காங்கிரசார் மறியல்: சத்தியமூர்த்தி பவன் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் கைது

சென்னை: ராகுல்காந்தியை தாக்கி கைது செய்த உத்தரபிரதேச காவல் துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற நேற்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கைது சம்பவத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் காங்கிரசார், ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில், ராயபுரம் சிக்னல் அருகே வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் சாலை மறியல் நடந்தது. அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து, காங்கிரஸ் எஸ்சி துறை சார்பில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் திரண்டனர்.

இதில் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் தீப்பந்தம் ஏந்தி பிரதமர் மோடிக்கு எதிராகவும் ராகுல்காந்தியை விடுவிக்க கோரி முழக்கமிட்டனர். இதற்கிடையே சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் காங்கிரசார் சத்தியமூர்த்தி பவன் முன்பு உள்ள சாலை வழியாக வந்த வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கே.எஸ்.அழகிரி உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சென்னையைப் போல திருச்சி, மதுரை, நெல்லை, கரூர் உள்பட தமிழகம் முழுவதும் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்: ‘ஆறுதல் அளிக்க சென்றது குற்றமா?. ராகுல்காந்தி மீது கை வைத்து தள்ள காவல் துறைக்கு யார் கொடுத்தது அதிகாரம். உத்தரபிரதேச அரசின் இந்த ஆணவ செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

Related Stories:

>