தினேஷ் குண்டு ராவ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரசாருக்கு கொரோனா பரிசோதனை: பாசிட்டிவ்வா, நெகடிவ்வா என கட்சியினர் காத்திருப்பு

சென்னை: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட காங்கிரசார் பலர் சுயமாக கொரோனா பரிசோதனை கொண்டுள்ளனர். தற்போது பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குண்டு ராவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னை வந்த அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பிரிவு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அதன் பின்னர் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.  இந்நிலையில், தினேஷ் குண்டுராவ் கடந்த 27ம்தேதி தனது டிவிட்டர் பதிவில், ‘எனக்கு சில அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதன் முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தார். இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் ஏராளனமா தமிழக காங்கிரசார் கலந்து கொண்டு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

அவரது வருகையால் நீண்ட நாட்களுக்கு பின்பு சத்தியமூர்த்தி பவனே அல்லோலப்பட்டது. அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், மாஸ்க் அணியாமலும் பலர் வந்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தினேஷ் குண்டு ராவ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரசார் சிலருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள மூத்த தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகவும், அவர்களுக்கான முடிவுக்காக காத்திருப்பதாக சத்தியமூர்த்திபவனில் பரபரப்பாக பேசப்படுகிறது. அவர்களில் பலர் ரிசல்ட் நெகட்டிவ்வாக வருமா... பாசிட்டிவாக வருமா என்று கலகத்தில் உள்ளனர்.

Related Stories: