முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் விழாவை தொடர்ந்து புறக்கணிக்கும் ஓ.பன்னீர்செல்வம்: சமரசம் ஏற்படாததால் அதிமுகவில் பரபரப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் விழாவை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்து வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை நியமித்த பிறகே முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்நிலையில் வருகிற 7ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவார் என செயற்குழு கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எடப்பாடியுடன் அமைச்சர் வேலுமணி ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில் சமரச முயற்சியும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மூன்று நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் எந்த அரசு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறார். அதன்படி கடந்த 29ம் மாவட்ட கலெக்டர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

நேற்று முன்தினம், சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நேற்று காலை 11 மணிக்கு, `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’’ திட்ட தொடக்க விழா சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில்தான் இருந்தார். ஆனாலும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதன்மூலம் எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

அதேநேரம் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜு, உதயகுமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரும் தற்போது முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேட்டி கொடுத்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜே.சி.டி.பிரபாகர் கூறும்போது, “அதிமுக நிர்வாகிகள் யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து வெளியில் பேட்டி கொடுக்கக் கூடாது என்று கட்சி தலைமை கடந்த மாதம் அறிவித்தது. ஆனால், கட்சியின் மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருவது கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயல்” என்று கூறியுள்ளார்.

Related Stories: