பாலியல் கொடுமைக்கு பலியான பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி மீது போலீஸ் தாக்குதல்: புதருக்குள் தள்ளிவிட்டு கைது செய்தனர்; உ.பி.யில் பரபரப்பு சம்பவம்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் 4 பேர் கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டதால் இறந்த ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக நடை பயணம் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். அவரை முட்புதருக்குள் தள்ளிவிட்டு கைது செய்தனர். அவருடன் சென்ற பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை, 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. கடுமையாக தாக்கி, எலும்புகளை உடைத்தது.

அவருடைய நாக்கையும் கடித்து துண்டித்தது. முதலில் அலிகார் மருத்துவமனையிலும். பின்னர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற அந்த இளம்பெண், கடந்த செவ்வாய்க்கிழமை இறந்தார். அவருடைய சடலத்தை குடும்பத்தினரிடம் கூட ஒப்படைக்காமல், இரவோடு இரவாக நேற்று முன்தினம் உத்தர பிரதேச போலீசார் அவசரகதியில் எரித்து விட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இம்மாநில போலீசார் நேற்று அளித்த பேட்டியில், ‘ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரமே செய்யப்படவில்லை,’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில், ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அவருடைய சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் நேற்று சென்றனர். டெல்லியில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து காரில் சென்ற அவர்களை, கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலையில், பாரி சவுக் என்ற இடத்தில் உத்தர பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். ‘144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், வாகனங்களில் கூட்டமாக செல்ல அனுமதிக்க முடியாது,’ என்று தெரிவித்தனர். இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய ராகுலும், பிரியங்காவும் 150 கிமீ தூரத்தில் உள்ள ஹத்ராசை நோக்கி விறுவிறுவென நடக்க தொடங்கினர்.

அவர்களுடன் வாகனத்தில் வந்த ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் நடந்தனர். ‘கூட்டமாக செல்ல அனுமதிக்க முடியாது,’ என்று போலீசார் மீண்டும் அவர்களை தடுத்தனர். ‘பரவாயில்லை, நாங்கள் இருவர் மட்டுமே செல்கிறோம்,’ என கூறி விட்டு, இருவரும் மீண்டும் நடந்தனர். இருப்பினும், அவர்களை  காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுர்ஜேவாலாவும், மற்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பின்தொடர்ந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. சிறிது தூரம் நடந்ததும் போலீசார் மீண்டும் அவர்களை தடுத்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால், அதிரடிப்படை போலீசார் உட்பட நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களை கூறி, டெல்லிக்கு திரும்பிச் செல்லும்படி ராகுலிடம் போலீசார் கூறினர். ஆனால், அதை அவர் நிராகரித்தார்.

அப்போது, போலீசாருக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

ராகுல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் செல்கிறேன். எந்த சட்டத்தின் அடிப்படையில் என்னைத் தடுக்கிறீர்கள்?’

போலீஸ் அதிகாரிகள்: கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன்படி நீங்கள் விதிகளை மீறுகிறீர்கள். அதை அனுமதிக்க முடியாது.

ராகுல் : சரி விடுங்கள்.  நான் மட்டும் தனியாக செல்கிறேன்.

போலீஸ் அதிகாரிகள்: உங்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். தனியாக நீங்கள் செல்வதை அனுமதிக்க முடியாது.

இதைத் தொடர்ந்து, ராகுல் நடந்து செல்ல முடியாதபடி போலீசார் அவரை சுற்றி அரண் அமைத்தனர். அதையும் மீறி ராகுல் செல்ல முயன்றபோது, அந்த இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவரை அருகில் உள்ள புதரில் தள்ளி விட்டனர். அவர் முட்புதரில் போய் விழுந்தார். இதை பார்த்ததும் காங்கிரஸ் தொண்டர்கள் வெகுண்டு எழுந்தனர். பாஜ.வுக்கும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் எதிராக கண்டன கோஷமிட்டனர். அங்கு பதற்றம் அதிகரித்து, மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. உடனே, ராகுலையும் பிரியங்கா காந்தியையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட ராகுல், பிரியங்காவை போலீசார் வேனில் ஏற்றி, அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் அங்கு தங்க வைக்கப்பட்ட அவர்கள், பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். பிறகு அங்கிருந்து டெல்லியை நோக்கி காரில் புறப்பட்ட அவர்களை, எல்லை வரையில் போலீசார் அழைத்துச் சென்று விட்டனர்.

* ஆயுதம் வைத்திருந்தார்களா?

ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்றதில் என்ன தவறு? 2 தலைவர்களும் அத்தனை ஆபத்தானவர்களா? அல்லது அவர்கள் ஆயுதங்கள் ஏதும் வைத்திருந்தார்களா?’ என்று ஆவேசமாக கேட்டுள்ளார்.

* எல்லைக்கு சீல்

ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும், இம்மாவட்டத்தை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். பல இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்க, ஹத்ராஸ் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்துக்குள் யாரும் நுழையாமல் தடுப்பதற்காக எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

* தானாக முன்வந்து ஐகோர்ட் வழக்கு

ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், பலி சம்பவம் பற்றி அலகாபாத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இச்சம்பவம் பற்றி நேரில் விளக்கம் அளிக்கும்படி உத்தர பிரதேச கூடுதல் தலைமை செயலாளர், மாநில டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி.க்கு சம்மன் அனுப்பியுள்ளது.

* பெண்களின் பாதுகாப்புக்காக காங். போராட்டம் தொடரும்

கடுமையான வெயில் அடித்த நிலையில், துப்பட்டாவை தலையில் போட்டுக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி விறுவிறுவென நடந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,  ‘‘ உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கான உதாரணம்தான் இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பு. இம்மாநிலத்தில் தினமும் 11 பலாத்கார வழக்குகள் பதிவாகின்றன. முதல்வர் யோகியின் அரசு, பெண்களின் பாதுகாப்புக்காக எதையுமே செய்வதில்லை.

கடந்தாண்டு இதே நேரத்தில் உன்னாவ் பெண் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு போராடினோம். இப்போது, ஹத்ராஸ் சம்பவத்துக்காக போராடுகிறோம். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வரை காங்கிரஸ் தனது போராட்டத்தைத் தொடரும். இந்து மக்களின் பாதுகாவலர்கள் என்று பாஜ அரசு கூறுகிறது. ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் இல்லாமல் இறுதிக் காரியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்து மதம் கூறியிருக்கிறதா? இரவோடு இரவாக, இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் எரித்தது மிகப்பெரிய அநீதி,’’ என்றார்.

Related Stories:

>