நாடு முழுவதும் கொரோனாவுக்கு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 33,255 பேர் உயிரிழப்பு: வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும்?

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 33 ஆயிரத்து 255 பேர் பலியாகி உள்ளனர். முந்தைய மாதங்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை தற்போது 63 லட்சத்து 6 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.

மாதத்தின் கடைசி நாளான நேற்று நாடு முழுவதும் புதிதாக 86,768 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 30 நாட்களில் (செப்டம்பர்) 26 லட்சத்து 24 ஆயிரத்து 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மருத்துவ நிபுணர்களை கவலையடையச் செய்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோனாவால் 19 லட்சத்து 87 ஆயிரத்து 705 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 98,628 பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது. இதில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 33,255 பேர் இறந்துள்ளனர். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,267 பேர் என இருந்தது. இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 11,988, ஜூலை மாதத்தில் 19,122, ஆகஸ்ட் மாதத்தில் 28,859 என படிப்படியாக உயர்ந்து, தற்போது செம்படம்பரில் 33 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் நாட்டில் முதலாவது இடத்தில் மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. அங்கு இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக ஆந்திராவில் 7 லட்சத்துக்கும் அதிகமானோரும், தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமானோரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கையிலும் மகாராஷ்டிர மாநிலமே முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 36,181 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் 2ம் இடத்தில் (9,453 பேர்) தமிழகமும், 3ம் இடத்தில் கர்நாடக மாநிலமும் (8,864 பேர்) உள்ளது.

Related Stories:

>