ஈரோடு சந்தையில் மாடுகள் வரத்து இல்லை: வியாபாரிகள் ஏமாற்றம்

ஈரோடு: ஈரோடு மாட்டு சந்தைக்கு இன்று மாடுகள் வரத்து இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையானது வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதே போல விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்குவதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மாட்டு சந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு கடந்த வாரம் மாட்டு சந்தை கூடியது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் நடத்தியதால் பாதியிலேயே சந்தை மூடப்பட்டது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் சந்தைகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதையத்து இன்று கருங்கல்பாளையம் மாட்டுசந்தை தொடங்கியது. ஆனால் மாடுகள் வரத்து அடியோடு நின்று போனதால் மாடுகளை வாங்குவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அடுத்தவாரம் முதல் நிலைமை சரியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக மாட்டு சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: