×

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக நாளை 7000 கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்: பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி நிறைவேற்ற முடிவு

சென்னை: வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் காந்தி ஜெயந்தியான நாளை மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின்போது உணவு பொருட்களான அத்தியாவசிய பொருட்கள் திருத்தம் சட்டம் 2020, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டம் 2020 (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு), விவசாயிகள் விளை பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் சட்டம் 2020 (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) ஆகிய மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த 3 மசோதக்கள் வேளாண் விளை பொருட்களை வரம்பின்றி பதுக்கி வைக்க அனுமதித்திருக்கும்,

விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு  அடிமைப்படுத்தும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலையை அங்கீகரிக்க மறுக்கும் என கூறி விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் சட்ட விதிமுறைகளை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க கூடாது என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து மேற்கட்ட மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 28ம் தேதி 3500  இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாகையில் அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏவான மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கடந்த 27ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். காந்தி ஜெயந்தியான நாளையும் போராட்டம் நடத்த உள்ளார். இந்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி உச்ச நீதிமன்றத்தில் புதிய ரிட் மனு தாக்கல் செய்தார். இது விரைவில் விசாரணைக்கு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியான நாளை தமிழகமும் முழுவதும் கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் மக்கள் விவசாய சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர். மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்ற மக்கள் வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நாகை மாவட்டத்தில் 434 கிராம ஊராட்சிகள், திருவாரூர் மாவட்டத்தில் 430, தஞ்சை மாவட்டத்தில் 589, திருச்சி மாவட்டத்தில் 404, புதுக்கோட்டையில் 497, பெரம்பலூர் மாவட்டத்தில் 121, அரியலூரில் 201, கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகள் என 8 மாவட்டங்களில் 2,833 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் காந்தி ஜெயந்தி தினமான நாளை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 7 ஆயிரம் கிராம சபை கூட்டத்தில் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக, இந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். மேலும் நிறைவேற்றாத கிராமங்களில் பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தீர்மானம் கொண்டு வலியுறுத்த உள்ளனர். மேலும், வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் மட்டும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராக 2833 ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது ஒரு வகையானது. அதே சட்டங்களுக்கு எதிராக கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பஞ்சாயத்துக்கு ராஜ் சட்டபடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கிராம சபை கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்படி தெரிவித்துள்ளோம். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் மதிப்பளித்து பல உத்தரவுகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அரசு இந்த தீர்மானத்தை மதிக்காவிட்டாலும், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உச்ச நீதிமன்றம் இதனை பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ெதன்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு: விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துவோம். ஏற்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்: மக்களிடம் வேளாண் சட்டத்தின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதை கிராம சபை கூட்டங்களில் விளக்கி கூறி, எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் குளிர்பான கம்பபெனி நிலத்தடி நீரை உறிஞ்சி தன்து ஆலையை நிறுவ ரூ.200 கோடி முதலீடு செய்தார்கள். ஆனால் கிராம ஊராட்சியில் வாழ்வாதாரம் பாதிக்கும. நீராதாரம் பாதிக்கும் என்று அப்போது அந்த கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த தீரமானம் உச்சநீதிமன்றம் வரை சென்று தீர்மானத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.

அந்த அளவுக்கு கிராம சபை தீர்மானம் மீது சட்டத்திட்டங்கள் வலுவாக உள்ளது. அதன்படி வேளாண் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும் அதை அமல்படுத்த முடியாத அளவுக்கு விவசாயிகளை பாதுகாக்க முடியும். எனவே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைேவற்ற கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்வர வேண்டும்.

Tags : Grama Niladhari Council , Resolution of 7000 Grama Niladhari Council tomorrow against the Agriculture Bill: Decision to pass as per Panchayat Raj Act
× RELATED கிராம சபை கூட்டம் நடத்திய திமுகவினர் மீதான வழக்கு ரத்து