×

நெல்லையில் காலியாகும் தற்காலிக காய்கனி கடைகள்: பழைய இடத்திற்கு திரும்புகின்றன

நெல்லை: கொரோனா தடை காரணமாக வெவ்வேறு இடங்களில் செயல்பட்ட பாளையங்கோட்டை காய்கனி கடைகள் மீண்டும் காந்தி மார்க்செட்டிற்கு திரும்ப தொடங்கி உள்ளன. கடந்த மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நெல்லை மாநகரில் உழவர் சந்தைகள் மற்றும் டவுன், பாளையங்கோட்டை காய்கனி மார்க்கெட் மூடப்பட்டு வெவ்வேறு தனித்தனி இடங்களில் செயல்பட ெதாடங்கின. குறிப்பாக பாளையங்கோட்டை காந்தி காய்கனி சந்தை மூடப்பட்டது. அங்கிருந்த காய்கனி கடைகள் வஉசி மைதானம் மற்றும் பாளை காவலர் குடியிருப்பு வளாகம் பகுதியில் மாற்றப்பட்டன.

இறைச்சி கடைகள் நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் செயல்பட்டன. கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக முதலில் இறைச்சி கடைகள் மீண்டும் பழைய இடத்தில் செயல்பட தொடங்கின. பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் செயல்பட்ட காய்கனி கடைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே காலி செய்யப்பட்டன. இன்று 1ம்தேதி மீதமுள்ள கடைகளும் காலி செய்யப்பட்டன. தற்போது இங்கு ஒரேயொரு காய்கறி கடை மட்டும் செயல்படுகிறது. இதுவும் ஓரிரு நாளில் இடம் மாறி விடும்.

இதனிடையே பாளை காவலர் குடியிருப்பு வளாகத்தில் செயல்படும் காய்கனி கடைகளையும் பழைய இடத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் காந்தி மார்க்கெட்டில் காய்கனி கடைகள் செயல்பட மாநகராட்சியினர் அனுமதி வழங்கி வருகின்றனர். பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கட்டிடத்தையும் முழுமையாக இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வணிகவளாகம் கட்டும் திட்டமும் உள்ளது. எதிர் வரும் நாட்களில் அதற்கேற்ப மாநகராட்சி முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

Tags : vegetable shops ,Nellai , Temporary vegetable shops vacant in Nellai: Returning to the old place
× RELATED நெல்லை மக்களவை தொகுதிக்கு அரசு...