ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்.!!!

சென்னை: ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் அந்த கிராமம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த கிராமத்திற்குள் ஊடகங்களுக்கும் அனுமதி கிடையாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஹத்ராஸ் கிராமத்திற்குச் செல்வதாக அறிவித்திருந்தனர். 144 தடை உத்தரவை மீறி பிற்பகல் வேளையில் ராகுலும், பிரியாங்காவும் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக பாரிக் சவுக் பகுதியில் வந்தபோது, மாவட்ட அதிகாரிகள், போலீசார் வழிமறித்தனர். அப்போது காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் தடை உத்தரவை மீறி கிராமத்திற்குள் சென்ற குற்றத்திற்காக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கைது செய்யபட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம் டுவிட்:

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?; அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க முயன்றதில் என்ன தவறு?; நாட்டின் சட்டங்கள் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு பொருந்தாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மு.க.ஸ்டாலின் கண்டனம்:

 

உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் நடத்திய போலீஸீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உ.பி.யில் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தி பிரியங்கா தடுக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தி மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது உ.பி.யின் அராஜக ஆட்சியை காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் டுவிட்:

உத்தரபிரதேச மாநில போலீசாரால் ராகுல்காந்தி தாக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச காவல்துறையினரின் செயல் கீழ்த்தரமானது என்றும், வெட்கக் கேடானது எனவும் கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி:

சென்னை: உ.பி.யில் ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேதனையளிக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ஆவேசம்:

போலீசார் கைது செய்தபோது வாக்குவாத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, ஹத்ராஸுக்கு செல்லும் வழியில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் செல்லும் போது போலீசார் என்னைத் தள்ளி, லத்தி சார்ஜ் செய்து தரையில் தூக்கி வீசினர். நான் கேட்க விரும்புகிறேன், மோடி ஜி மட்டுமே இந்த நாட்டில் நடக்க வேண்டுமா? ஒரு சாதாரண மனிதன் நடக்க கூடாதா? எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது, எனவே தான் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்காமல் பின்வாங்க மாட்டோம் என தெரிவித்தார்.

Related Stories: