சமூக இடைவெளியுடன் இயக்கினால் வருவாய் கிடைக்காது: தனியார் மினி பஸ்கள் இயக்கம் நிறுத்தம்

ஊட்டி: தனி மனித இடைவெளியை கடைபிடித்து இயக்கினால் வருவாய் கிடைக்காது என்பதால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக தனியார் மினி பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலையிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பஸ் போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதனைத்தொடர்ந்து 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி கொண்டு பஸ்கள் தூய்மைப்படுத்த வேண்டும். பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். 35 பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதனை பின்பற்றி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களிலும் குறைந்த அளவிலான பயணிகளே சென்று வருகின்றனர். லாபம் இல்லையென்றாலும் சேவை அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

தனியார் மினி பஸ்களை பொறுத்தவரை கூட்டமாக பயணிகளை ஏற்றி சென்றால்தான் வருவாய் கிடைக்கும்.

அதிலும் நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் டீசல் மைலேஜ் குறைவு என்பதால் மினி பஸ்களுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது. இந்த சூழலில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தனிமனித இடைவெளியை கடைபிடித்து கூட்டம் குறைவாக மினி பஸ்களை இயக்கினால் போதிய வருவாய் கிடைக்காது என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக தனியார் மினி பஸ்கள் இயக்கப்படாமல் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றிலும் புற்களும் செடிகளும் வளர்ந்துள்ளன. இதனை நம்பியிருந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலையிழந்துள்ளனர்.

இது குறித்து தனியார் மினி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஊட்டி உட்பட 4 தாலுகாக்களில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பெரிய பஸ்களில் 35 சீட்டுகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினிபஸ் என்றால் 20 பேர் வரை மட்டுமே ஏற்ற முடியும். டிக்கெட் கட்டணமும் குறைவு என்பதால், மிக குறைவாக பயணிகளை ஏற்றி ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு சம்பளம் வழங்கும் அளவிற்குகூட வசூல் ஆகாது. அதனால் மினி பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். கொரோனா தொற்று சரியானால்தான், மினி பஸ்கள் இயக்க முடியும் என்பதால் மீண்டும் மினி பஸ்கள் இயக்குவது இப்போதைக்கு இருக்க வாய்ப்பில்லை’’ என்றனர்.

Related Stories: