தாகம் தீர்க்க குடிநீர் வழங்கியவருக்கு சாட்சியாய் நிற்கும் கல் மண்டபங்கள்

சிவகங்கை: மக்களுக்கு தாகம் தீர்க்க குடிநீர் வழங்கியவருக்கு மருதுபாண்டியர்கள் கல் மண்டபம் அமைத்துக் கொடுத்து சிறப்பித்துள்ளனர். தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறியதாவது: சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் காளையார்கோவில் போரில் 1772ல் இறந்ததால் அவர் நினைவாக காளையார்கோவில் சிவன் கோவிலில் நூற்றி ஐம்பத்து இரண்டரை அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை மருதுபாண்டியர்கள் அமைத்தனர்.

அப்பணியின் போது கொல்லங்குடி புதிதாக உருவான ஊராக இருந்ததால் ஊரணி வசதியில்லை. இதனால் கொல்லங்குடி பகுதியில் குருகாடிபட்டி கிராமத்தை சேர்ந்த மொட்டையன் என்பவர் இறைத் தொண்டாக தண்ணீர் பந்தல் வைத்து கோபுரம் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிற பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து வழங்கியுள்ளார். இச்செய்தி மருது சகோதரர்களுக்கு தெரிவிக்கப்பட அவரைக் காண வந்துள்ளனர். வரிசையாக மக்கள் செங்கற்கற்களை கை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் மொட்டையன் சாமியை மருது சகோதரர்கள் கண்டு அவரை பெருமை செய்யும் விதமாக உமக்கு கொடையாக என்ன வேண்டும் எனக் கேட்க கொல்லங்குடிக்கு குடிநீர் ஊரணி வெட்டித் தரக் கேட்டுள்ளார்.

கொல்லங்குடிக்கு குடிநீர் ஊரணியை வெட்டித் தந்ததோடு, கொல்லங்குடியிலும் மொட்டயன் சாமி பிறந்த குருகாடிப்பட்டியிலும் அவருக்கு பெருமை செய்யும் விதமாக கல் மண்டபங்களை கட்டி வைத்து நிலங்கள் வழங்கி சிறப்பித்தனர். இன்றும் இந்நிகழ்வின் சாட்சியாக கொல்லங்குடியிலும், குருகாடிபட்டியிலும் மண்டபங்கள் இருப்பதோடு கொல்லங்குடி குடிநீர் ஊரணி மருது ஊரணி என அழைக்கப்படுகிறது. இக்கல்மண்டபங்களை மொட்டையன் சாமி வழித்தோன்றல்கள் இன்றும் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர் என்றார்.

Related Stories: