×

வாழப்பாடி அருகே நிலத்தகராறில் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கட்டப்பஞ்சாயத்து கும்பல்

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த கருமந்துறை சின்னகல்வராயன்மலை வடக்கு பகுதியில் உள்ள சின்ன மாங்கோடு கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணன். இவருக்கும், உறவினரான கோவிந்தன் என்பவருக்கும், நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 28ம் தேதி, இதுகுறித்து அந்த ஊரில் உள்ள ஊர்க்கவுண்டர் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி, கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.

இதன் முடிவில் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி சங்கீதா, அண்ணன் வெங்கடேஷ், அவரது மனைவி கம்சலா, தந்தை சடையன், தாய் உண்ணாமலை மற்றும் 4 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரையும், ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும், இவர்கள் ஊருக்குள் வந்தால், கடைகளில் எந்த பொருட்களும் வழங்கக்கூடாது. தடத்தில் நடந்து செல்லக்கூடாது என உத்தரவிட்ட அவர்கள், அவர்கள் ஊருக்குள் வருவதை தடுக்க, முள்வேலி போட்டு தடத்தை அடைத்தனர்.

இதனையடுத்து, எந்த ஆதரவும் இல்லாமல் கடந்த 2 நாட்களாக சிரமப்பட்டு வந்த லட்சுமணன் குடும்பத்தினர், நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமனை நேரில் சந்தித்து, இதுகுறித்து புகார் மனு வழங்கினர். அப்போது, தங்களுக்கு நடந்த கொடுமை குறித்த போட்டோ ஆதாரத்தையும் அவரிடம் வழங்கினர். கட்டப்பஞ்சாயத்து நடத்தி, கொரோனா காலத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊருக்குள் அனுமதித்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

லட்சுமணன் நிலம் சம்பந்தமான வழக்கில், ஆத்தூர் நீதிமன்றத்தில் நிரந்தர தடை ஆணை வாங்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து சமாதானம் செய்த நிலையில், கட்டப்பஞ்சாயத்து நடத்தி குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : gang ,Kattappanchayattu ,village ,Vazhappadi ,land , Panchayat, Vazhappadi
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை