×

இன்று தேசிய ரத்ததான தினம்

நாகர்கோவில்: இன்று தேசிய ரத்த தானம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ரத்த தானம் 1942 ம் ஆண்டு தொடங்கியது. இரண்டாம் உலகப்போரில் காயம் அடைந்த வீரர்களுக்காக ரத்த தானம் பெறப்பட்டது. இதற்காக ரெட் கிராஸ் சார்பில் கொல்கத்தாவில் முதல் ரத்த வங்கி தொடங்கப்பட்டது.

1960 களில் தன் ஆர்வலர்களால் பல்வேறு நகரங்களில்  ரத்த வங்கிகள் தொடங்கப்பட்டன. தற்போது சிறிய நகரங்களில் கூட ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 1975ம் ஆண்டு இந்திய ரத்த மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சொசைட்டி சார்பில் அக்டோபர் 1 ம் தேதி தேசிய ரத்த தான தினமாக அறிவிக்கப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் ரத்தத்தின் அளவு 450 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைப்பதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் ரத்த கொடையாளிகள் தேவை. பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்.  ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் ரத்ததானம் செய்வது அந்த நாட்டின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்கான குறைந்த பட்சமாகும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2018 மார்ச் 23ம் தேதி மக்களவையில் வழங்கப்பட்ட தரவுகளின் படி உலக சுகாதார அமைப்பின் விதிமுறைக்கு ஏற்ப இந்தியாவில் 1.9 மில்லியன் யூனிட் குறைவாக இருந்தது.

தேவையான தகுதிகள்

● ரத்த தானம் செய்பவர் 18 வயது நிரம்பியவராகவும் 60 வயது மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
● ரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
● ரத்த தானம் செய்பவரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். *ஆண், பெண் இருபாலரும் ரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள். எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
● கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.

நடைமுறைகள்

● மது அருந்தியவர்கள் ரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம்.
● புகைப்பிடித்திருந்தால் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு ரத்த தானம் செய்வது சிறந்தது. ரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப் பிடிப்பது நல்லது.
● 3 மாத இடைவெளிக்குப் பிறகே அடுத்ததாக ரத்த தானம் செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

● எய்ட்ஸ்,மேக நோய்,நீரழிவு நோய்,ரத்த அழுத்தம் ,வலிப்பு நோய் உள்ளவர்கள் ரத்த தானம் கொடுக்ககூடாது.
● இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது ரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
● பெண்கள் மாதவிடாய் காலங்களில் ரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
● தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நன்மைகள்

● தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
● ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
 ●  இந்தியாவில் மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் அவசர கால ரத்தமாற்றத்திற்கு ரத்த தானங்களையே நம்பியுள்ளன.

கொரோனா காலத்தில் 1,780 யூனிட் தானம்

குமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நாஞ்சில் ரத்தான அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் ராகுல் கூறியதாவது: மார்ச் 25 முதல் செப்டம்பர் 30 (நேற்று முடிய)வரை 200 நாட்களில் குமரி உள்பட தமிழகம் முழுவதும் கேரளத்திலும் 1,780 யூனிட் ரத்தம் தானம் செய்துள்ளோம். இதில், ஆயிரம் யூனிட் நெகடிவ் ( ஏ, பி, ஏபி நெகடிவ்) வகை ரத்தமாகும். எதிர்மறை ரத்தம் அரிது என்பதால் அதனை உடனடியாக ஏற்பாடு செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம்.

கொரோனா ஊரடங்கில் ஏப்ரல் 22ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற முகாமில் தமிழகத்திலேயே 100 யூனிட்டிற்கும் அதிகமான ரத்தம் சேகரித்து வழங்கியுள்ளோம். குமரியில் பிளாஸ்மா தானமும் முதன்முதலில் செய்துள்ேளன். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் எங்கள் அறக்கட்டளை சார்பில் 64 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளோம். இந்த 7 ஆண்டுகளில், 15 யூனிட் நெகடிவ் வகை ரத்தம் உள்பட 20 ஆயிரத்திற்கும் அதிகமான ரத்தம் தானம் வழங்கியுள்ளோம். பணம் இருந்தால்தான் உதவ முடியும் என்பதில்லை. ரத்த தானம் வழங்கியும், சமுதாயத்திற்கு நாம் பயனுள்ள வகையில் உதவ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : National Blood Day , National Blood Day
× RELATED மரங்கள் இல்லாமல் காகிதம்!