×

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் 13ம் நூற்றாண்டு பாண்டியர் கால நடுகல் கண்டெடுப்பு

திருவண்ணாமலை: கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால நடுகல் கண்ெடடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகா, மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மிருகண்டா நதியின் அருகே உள்ள காட்டுப்பகுதியில், நடுகல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த சுதாகர், சக்திவேல், சிவா ஆகியோர் கள ஆய்வு நடத்தினர். அப்போது, முட்புதருக்கு இடையே 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்த தொல்லியல் துறை ஆய்வாளர் சு.ராஜகோபால் கூறுகையில், இந்த கல்வெட்டு விக்ரம பாண்டியனின் 4வது ஆண்டில் வெட்டப்பட்டுள்ளது.

அதில், ஜெயவனத்தானிப்பாலை உடையான் ஆண்டாண்டை எனும் வன்னிய நாடாழ்வான் மகன் திருமலை, அழகியார் சமுத்திரம் என்ற இடத்தில் இருந்து, மாட்டை கவர்ந்து வரும்போது, பிரண்டை என்ற இடத்தில் இறந்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. இறந்து போனார் என்பதை மீண்டு எய்தினார் என்றும், வருகையிலே என்பதை வருகைச்சிலே எனும் உள்ளூர் வழக்கில் எழுதப்பட்டுள்ளது’’ என்றார்.மேலும், தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் கூறுகையில், வீரனின் உருவம் அம்பை எய்தும் நிலையில், கச்சையில் குத்துவாளும் உள்ளது போல நடுகல் அமைந்துள்ளது. இதில், மாட்டின் உருவம் இல்லை. இக்கல்வெட்டு கிடைத்த பகுதியில் மஞ்சு விரட்டு என்பது பண்டைய காலம் முதல் நடைபெறும் பண்பாட்டு விழாவாகும். எனவே, இந்த கல்வெட்டு தனித்துவம் மிக்கது’’ என்றார்.

Tags : Pandiyar ,Cholanguppam ,Kalasapakkam , Thiruvannamalai, Pandiyar period planting, discovery
× RELATED 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று...