×

நெல்லை எக்ஸ்பிரஸ் நாளை முதல் இயக்கம்: முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்கலாம்

நெல்லை: தெற்கு ரயில்வேக்கு வருவாயை அள்ளித்தரும் நெல்லை எக்ஸ்பிரஸ் நாளை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. பொதிகை எக்ஸ்பிரஸ் 4ம் தேதி செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறது. இந்த ரயில்களுக்கான பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு நெல்லை பிட்லைனில் தயார் நிலையில் உள்ளன. அனந்தபுரி எக்ஸ்பிரசும் இயக்கப்படுவதால் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 22ம் தேதி முதல் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை வழியாக திருச்சி இன்டர்சிட்டி ரயில் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இம்மாதத்தில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் உள்ளிட்ட 7 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி நெல்லை- எழும்பூர் இடையே நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலாக (எண் 02632) நாளை(2ம் தேதி) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு,  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 6.35  மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் சென்னையில் இருந்து 5ம் தேதி இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர்-நெல்லை இடையே இயக்கப்படும் ரயில்(எண்.02631) 5ம் தேதி முதல்  சென்னையில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மாம்பலம், தாம்பரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே பொதிகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலாக (எண் 02661) 3ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், திருச்சி, மதுரை, தென்காசி வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கமாக செங்ேகாட்டையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் (எண்.02662)4ம் தேதி இரவு 6.10 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 6 மணிக்கு சென்று சேரும்.

கடந்த ஒரு மாதமாக நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்களை இயக்கிட பயணிகள் கோரிக்கை எழுப்பி வந்த நிலையில், அதற்கு நடவடிக்கை எடுத்த நெல்லை, தென்காசி தொகுதி எம்.பி.க்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு நெல்லை, தென்காசி பயணிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். நெல்லை, பொதிகை ரயில்களுக்கான பெட்டிகள் அனைத்தும் தற்போது நெல்லை சுற்றுவட்டார ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

இப்பெட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் நெல்லை பிட்லைனில் நேற்று நடந்தன. முன்பதிவற்ற பெட்டிகளை கழற்றி விட்டு, மற்ற பெட்டிகளை ஒருங்கிணைத்து ரயில் இயக்கத்திற்கு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.   
நெல்லை வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரசும் 3ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயிலாக (எண்.06723) 3ம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லைக்கு 4ம் தேதி காலை 7.50 மணிக்கு வந்து சேரும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து 4ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (எண்.06724), அன்று இரவு 7.50 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மேலும் சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இம்மாதத்தில் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்தவர்கள் மட்டு மே பயணிக்க முடியும். முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்படாது.

பொதிகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9 மணி 5 நிமிடங்களுக்கு புறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த நேரம் மாற்றப்பட்டு இரவு 8 மணி 40 நிமிடங்களுக்கு அதாவது 25 நிமிடங்கள் முன்னதாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

20 பெட்டிகள் இணைப்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது வழக்கமாக மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 6 இணைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு பெட்டி குறைத்து 5 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படவில்லை. அவற்றிற்குப் பதிலாக 3 இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகள்

நெல்லை, பொதிகை உள்ளிட்ட சிறப்பு ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் பயணத்தின்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பயண நேரத்துக்கு 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையம் வந்துவிட வேண்டும். பயணம் செய்யும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை ரயில் நிலைய வாசலில் மேற்கொள்ளப்படும். கொரோனா அறிகுறியுள்ள பயணிகளுக்கு பயணத்திற்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட அனைத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளும் ஒவ்வொரு ரயிலிலும் பின்பற்றப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கேரளாவுக்கு முதல் ரயில்

கொரோனா காரணமாக மார்ச் 22ம் தேதி முதல் தென்மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு ரயில்கள் இயக்கம் முற்றிலுமாக தடைப்பட்டது. ஊரடங்கு தளர்வில் ஜூன் மாதம் தென்மாவட்டங்கள் வழியாக திருச்சி இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டது. இருப்பினும் அந்த ரயில் திருவனந்தபுரம் செல்வதற்கு பதிலாக நாகர்கோவிலோடு நிறுத்தப்பட்டது. தென்மாவட்டங்களில் இருந்து கேரளாவில் வேலை பார்க்கும் பலரும் திருவனந்தபுரத்திற்கு ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் 6 மாதத்திற்கு பிறகு, தென்மாவட்டங்களில் இருந்து மு தல் ரயிலாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கேரளாவுக்கு செல்கிறது.

Tags : Nellai Express ,passengers , Southern Railway, Booking
× RELATED ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில்...