சர்வதேச முனையத்தில் மட்டும் டிராலிக்கு அனுமதி சென்னை உள்நாட்டு முனையத்தில் மூட்டை சுமக்கும் விமான பயணிகள்: அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

சென்னை: கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. 2 மாதங்களுக்கு பின்பு மே 25ம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவை மிகவும் குறைந்த அளவு, கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. அப்போது உள்நாட்டு பயணிகள் பெரிய அளவில் லக்கேஜ்கள் எடுத்துச் செல்லக்கூடாது. ஒஎனவே, உள்நாட்டு முனையத்தில் பயணிகளுக்கு டிராலிகள் சேவைகள் கிடையாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை பெருமளவு தளர்த்தியுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 126 விமானங்கள் இயக்கப்பட்டு, சுமார் 13 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.

 உள்நாட்டு பயணிகள் குறைந்த அளவு லக்கேஜ்களையே எடுத்துச்செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை பயணிகள் தற்போது கடைபிடிப்பதில்லை. ஆனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டிராலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மட்டும் கடந்த மே 25ம் தேதியில் இருந்து எந்த தளர்வுகளும் இல்லாமல் பழைய நிலையே நீடிக்கிறது. இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு பகுதிகளில் பயணிகள் டிராலிகள் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் பலர், டிராலிகளை தேடி பார்த்துவிட்டு கிடைக்காமல், லக்கேஜ்களை மிகவும் கஷ்டப்பட்டு கைகளில் தூக்கிச் செல்கின்றனர். சில விமான பயணிகள் அதிகாரிகளிடம் டிராலிகளை கேட்டு கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த டிராலிகள் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். ஆனால், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கம்போல் டிராலி சேவைகள் பயணிகளின் பயன்பாட்டில் உள்ளன. உள்நாட்டு முனையத்தில் மட்டும் பயணிகளின் பயன்பாட்டிலிருந்த சுமார் 1,500 டிராலிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: