×

தாம்பரம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

தாம்பரம்: தாம்பரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, காலை 9 மணி அளவிலும், இரவு நேரங்களில் 10 முதல் 12 மணி வரையிலும் தினமும் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால், காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும், இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, தாம்பரம் மின்வாரிய அலுவலகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அழைப்பை எடுப்பதே இல்லை. சில சமயங்களில் தகாத முறையில் பேசி இணைப்பை துண்டித்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மின்தடை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,suffering ,Tambaram , Frequent power outages in Tambaram area: Public suffering
× RELATED வாட்டி வதைக்கும்...