செங்கல்பட்டில் பரபரப்பு சிறப்பு மின்சார ரயில்கள் திடீர் நிறுத்தம்: ரயில்வே போலீசாருடன் வாக்குவாதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், அங்கு வந்த அரசு ஊழியர்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ரயில்வே ஊழியர்கள் சென்னை செல்வதற்கு வசதியாக செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் தமிழக அரசு அனுமதியுடன் சென்னை தலைமை செயலகம், வணிக வரித்துறை, கல்வித் துறை உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காலை வழக்கம்போல் சிறப்பு ரயிலில் செல்வதற்காக, 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வந்தனர். அப்போது, அங்கிருந்த ரயில்வே போலீசார், அவர்களை நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர்.

மேலும், சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் அதில் செல்லும்படி கூறினர். இதனால் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ரயில்களில் முறையான சமூக இடைவெளியை பின்பற்றி அனைவரும் செல்வதாகவும், அரசு பஸ்களில் கூட்ட நெரிசலில் செல்லும்போது, தங்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் அரசு ஊழியர்கள் கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சிறப்பு ரயில் இயங்காது என திட்டவட்டமாக தெரிந்ததும், ஏமாற்றத்துடன் ஒருசிலர் வீட்டுக்கு திரும்பி சென்றனர். பலர், பஸ்கள் மூலம் வேலைக்கு சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: