×

கடும் நிதி தள்ளாட்டத்தில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை பிஎன்பி வாங்குகிறதா? வழிமுறைகளை ஆராய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

புதுடெல்லி: கடுமையான நிதித் தள்ளாட்டத்தில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை வாங்குவதற்கான வழிகளை ஆராயுமாறு, பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. லட்சுமி விலாஸ் வங்கியின் 93வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், ஏற்கெனவே வங்கி நிர்வாகத்தில் இருந்த நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி உட்பட 7 பேரின் மறு நியமனத்தை பங்குதாரர்கள் புறக்கணித்தனர். வங்கி வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை. வராக்கடன் அதிகரிப்பு போன்றவற்றால் நிதி தள்ளாட்டத்தில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை, இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே நடைபெற்றன.

இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை. லட்சுமி விலாஸ் வங்கி நல்ல நிதி நிலையுடன் மீண்டும் முழுமையான செயல்பாட்டுக்கு வர குறைந்தது ரூ.1,500 கோடி முதல் ரூ.2,500 கோடி மூலதனம் திரட்ட வேண்டும் என வங்கி நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது, இந்த வங்கியை கிளிக்ஸ் கேபிடல் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்த வங்கியை வாங்குவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறும், அதற்காக ஆயத்தம் ஆகுமாறும் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி இணைப்பால், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் எங்கள் வங்கி வலுப்பெற்றுள்ளது. ஆனால், தென்மாநிலங்களிலும் எங்கள் இருப்பு சாத்தியமானால்தான், நாடு முழுவதும் வலுப்பெற்ற ஒரு வங்கி கட்டமைப்பை உருவாக்க முடியும். இருப்பினும், லட்சுமி விலாஸ் வங்கியை எங்கள் வங்கியுடன் இணைப்பது தொடர்பாக உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை’’ என்றனர். கடந்த 2003ல், கேரளாவை சேர்ந்த நெடுங்காடி வங்கியை பஞ்சாப் நேஷனல் வங்கி இணைத்துக் கொண்டது. இது கேரளாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியை விரிவுபடுத்த உதவியது. தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு குறைந்த கிளைகளே உள்ளன. எனவே, இந்த இடைவெளியை நிரப்ப லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பு உதவும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

* தொடரும் சரிவு
கடந்த 10 காலாண்டுகளாகவே லட்சுமி விலாஸ் வங்கி இழப்பை சந்தித்து வருகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் இந்த வங்கிக்கு ரூ.836.04 கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும், நிதி முறைகேடு தொடர்பாக, வங்கியின் நிர்வாக குழு மீது பொருளாதார குற்றப்பிரிவு புகார் கொடுத்த பிறகு, உடனடி சீர் செய்யும் முயற்சியாக, சில கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்தே லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Lakshmi Vilas Bank ,BNP ,Reserve Bank , Is BNP buying Lakshmi Vilas Bank, which is in dire financial straits? Reserve Bank instruction to explore guidelines
× RELATED மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று...