×

அனைத்து வகையிலும் சன்ரைசர்ஸ் அமர்க்களமாக விளையாடியது... டெல்லி பயிற்சியாளர் பான்டிங் ஒப்புதல்

அபுதாபி: சன்ரைசர்ஸ் அணியிடம் தோற்றதற்கு தனிப்பட்ட வீரர்கள் யாரையும்  குறை சொல்ல விரும்பவில்லை. அனைத்து வகையிலும் அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள் என்று டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 2 வெற்றிகளுக்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் மோதியது. விறுவிறுப்பான அந்த போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் முதல் தோல்வியை டெல்லி சந்தித்தது.

இது குறித்து டெல்லி அணி பயிற்சியாளர் பான்டிங் கூறியதாவது: யாராவது ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று விளையாடி 60 அல்லது 70 ரன் குவித்தால் கட்டாயம் வெல்லலாம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தத் தவறிவிட்டனர். எனினும், 15 ரன்னில் தான் தோல்வி அடைந்தோம். முயற்சி செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. இருந்தாலும் பவர் ப்ளேயில் எங்களுக்கு போதுமான ரன் கிடைக்கவில்லையா, தொடக்க வீரர்கள் கவுரவமான ஸ்கோரை எட்டவில்லையா, என்ன செய்தோம், என்ன செய்யவில்லை என எல்லாவற்றையும் குறித்து உட்கார்ந்து பேசுவோம், அலசுவோம். தோல்விக்காக தனிப்பட்ட எந்த வீரரையும் குறை கூற விரும்பவில்லை..  

ஆனால் ஒரு அணியாக நாங்கள் வெற்றியை இழந்துள்ளோம். அனைத்து வகையிலும் சன்ரைசர்ஸ் எங்களை தோற்கடித்தது என்றே சொல்ல வேண்டும். துபாயை விட அபுதாபி மைதானம் மிகப் பெரியது. களத்தின் பரிமாணங்களும் சற்று வித்தியாசமானது. ஆடுகளம் நன்றாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், கொஞ்சம் புற்களும் முளைத்திருந்தது. கூடவே 2வது இன்னிங்சின்போது கொஞ்சம் பனியும் இருந்தது. எனினும் சன்ரைசர்ஸ் வீரர்கள் கூட்டாக செயல்பட்டனர். தொடக்க ஆட்டக்காரர்கள் கவுரமான எண்ணிக்கையை எட்டினர். பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அதே சமயம் ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக காகிசோ ரபாடா அற்புதமாகப் பந்துவீசி வருகிறார். இவ்வாறு பான்டிங் கூறியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் சனிக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.


Tags : Sunrisers ,Ponting ,Delhi , Sunrisers played in all respects ... Delhi coach Ponting approves
× RELATED ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான...