திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் பாஜ நிர்வாகி உள்பட 2 பேர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி உட்பட 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமர் கிசான் திட்டத்தில் ₹120 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாத நபர்கள் இந்த திட்டத்தில் போலியாக சேர்ந்து உதவித்தொகை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலியாக சேர்ந்துள்ள நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப வசூலிக்கும் பணி தீவிரமாக அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 3,242 பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் ₹1 கோடியே 23 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,687 பேர் முறைகேடாக இணைக்கப்பட்டு, ₹80 லட்சத்து 60 ஆயிரம் நிதி முறைகேடாக பெற்றிருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் மற்றும் கணினி மைய உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட ஜோலார்பேட்டை பாஜ நிர்வாகி கண்மணி, கணினி மைய உரிமையாளர் ெஜகநாதன் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மதுரையில் 12 பேர் மீது வழக்கு

மதுரை மாவட்டத்தில் கடந்த ஏப்.1ம் தேதிக்குப் பிறகு 16,474 பேர் இத்திட்டத்தில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11,135 பேர் தகுதியற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.  இதுவரை ரூ.1.60 கோடி வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மதுரை மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் இருந்து பெற்றுள்ள சிபிசிஐடி போலீசார், நேற்று 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related Stories: