×

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய பாஜ அரசின் கூண்டு கிளியாக சிபிஐ மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு

சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய பாஜ அரசின் கூண்டு கிளியாக சிபிஐ மாறிவிட்டது என்றும், இது சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு எனவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்து தள்ளப்பட்டுள்ளது என்று பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும், பாபர் மசூதி இடிப்பு வழக்கினை, அதில் உள்ள குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல், சி.பி.ஐ. தோற்று இருப்பது, இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய  சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

 மசூதி மட்டுமல்ல, எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும். அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும். குற்ற வழக்குகளில் குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பைச் சீர்குலைத்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில், நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., அப்படிச் செயல்பட ஏனோ தவறி, இன்று மத்திய பாஜ அரசின் கூண்டுக்கிளியாக மாறிவிட்டது வெட்கக் கேடானது.  அரசியல் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கிய ஒரு முக்கிய வழக்கில், பொறுப்பில்லாமல் ஏனோதானோ மனப்பான்மையுடன், சி.பி.ஐ. செயல்பட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமைகளைத் துறந்திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை தருவதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : CBI ,cage branch ,government ,BJP ,Babri Masjid ,MK Stalin , CBI has become a cage branch of the BJP government in the Babri Masjid demolition case: MK Stalin
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...