பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்: சிறுபான்மையினர்கள் நலனை பாதுகாப்பதை இந்தியா உறுதி செய்ய வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 1992ம் ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரித்தார். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31க்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தினசரி நடந்தது.

பாஜ மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடந்த ஜூலை 24-ம் தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்தனர். இதில் இருவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து வழக்கின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிபதி எஸ்.கே.யாதவ், வழக்கை முடிக்க காலஅவகாசம் கோரினார். அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் இன்றைக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, லக்னோ சிபி‌ஐ சிறப்பு நீ‌திமன்ற நீதிபதி‌ எஸ்.கே.யாதவ், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் 2,000 பக்கத் தீர்ப்பை இன்று முற்பகல் 11.45 மணிக்கு நீதிமன்ற அறை எண்: 18ல் வாசித்தார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை. மசூதி இடிக்கும் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தவில்லை.  மசூதியை இடித்த கரசேவர்களை குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலைவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்க தூண்டவில்லை. அதனால், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர்’ என்று தீர்ப்பில் தெரிவித்தார்.

பாபர் மசூதி தீர்ப்பு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை பாகிஸ்தானின் உள்ள ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில்; வரலாற்று சிறப்பு வாய்ந்த மசூதியை இடித்தவர்களை விடுவித்தது வெட்கக்கேடானது. சிறுபான்மையினர்கள் நலனையும் அவர்களின் வழிபாட்டு தலங்களையும் பாதுகாப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: