பாலமோர்சாலை குறுக்கே கழிவுநீரோடையில் பாலம் அமைக்கப்படுமா?

நாகர்கோவில்: நாகர்கோவில் பாலமோர்சாலை குறுக்கே கழிவுநீரோடையில் போடப்பட்ட காங்கிரீட் குழாயை அகற்றிவிட்டு பாலம் அமைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை மற்றும் புத்தன்அணை குடிநீர் திட்டப்பணிக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. குமரிக்கு தமிழக முதல்வர் வருகைதர இருந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஒரு சில சாலைகள் வேகவேகமாக போடப்பட்டது. தற்போது அந்த சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்துள்ளது.

அதுபோல் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே உள்ள பாலமோர்சாலை குறுக்கே செல்லும் கழிவுநீரோடையின் இருபுறமும் உள்ள கற்கள் பெயர்ந்து விழுந்ததால், அங்கு பெரிய குழாய் பதிக்கப்பட்டு சாலை போடப்பட்டது. இந்த கழிவுநீரோடை மாநகராட்சி அலுவலகம் முன்புறம் வழியாக மாடன்கோயில் தெரு, அண்ணாவிளையாட்டு மைதானம் அருகே பாலமோர் சாலையின் குறுக்கே பாய்ந்து, திரட்டுதெரு வழியாக செல்கிறது. பாலமோர் சாலை குறுக்கே போடப்பட்டுள்ள காங்கிரீட் குழாய் நீளம் குறைவு என்தால் இருபுறங்களிலும் கழிவுநீர் ஓடை மூடப்படாமல் உள்ளது.

இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் விழுந்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக அரசு போக்குவரத்துகழக பஸ்கள் உள்பட கனகரவாகனங்கள் சென்று வருவதால் காங்கிரீட் குழாய் எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த காங்கிரீட் குழாயை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு பாலமோர்சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்லும் வகையில் சிறிய பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: