பெற்றோர்கள் நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் ஆசை வார்த்தைகளில் மயங்க காரணம்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை.!!!

சென்னை: பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் வெளியிட்டுள்ள இந்தியாவில் குற்றங்கள் -2019 அறிக்கையில் கடந்த ஆண்டைவிட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையின் மூலம் கடந்த 2019ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான 4,05,861 குற்றங்கள் பதிவாகியுள்ளன என்றும் இது 2018ம் ஆண்டைவிட ஏழு சதவீதத்திற்கும் மேலானது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்க கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பெற்றோர்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேற காரணம் என்றும் திருமணமான நபர்களுடன், இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது மிகுந்த வேதனை அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: