சென்னையை அடுத்த எண்ணூரில் முகத்துவாரத்தைத் தூர்வாரக்கோரி 7 கிராம மீனவர்கள் போராட்டம்!!!

சென்னை:  சென்னையை அடுத்த எண்ணூரில் துறைமுக முகத்துவாரத்தைத் தூர்வாரக்கோரி 7 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எண்ணூர் பகுதியில் உள்ள தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், சிவன்படைவீதி குப்பம் ஆகிய 7 கிராம மீனவர்களும் படகில் பயணித்து கறுப்புக்கொடியுடன் எண்ணூர் துறைமுகத்தை முற்றுகையிட்டுள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட எண்ணூர் துறைமுகத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்படும் எண்ணெய் கழிவுகளால் முகத்துவாரப்  பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்பட்டு கப்பல்கள் தரைதட்டுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மணல் திட்டுகள் அதிகரிப்பு, மற்றும் நீர் மாசுபடுதல் ஆகியவற்றால் தங்களின் மீன் பிடி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் துறைமுகத்தை தூர்வாரி, நிரந்தர தூண்டில் வளைவை அமைத்துத்தருமாறு தற்போது துறைமுகத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். இதற்கிடையில் பெண்கள் உள்ளிட்டோரும் எண்ணூர் முதல் தாழங்குப்பம் வரை மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக அங்குள்ளவர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: