தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க உள்ளதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெப்பசனலாம் காரணமாக நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

புறநகர் பகுதிகளாக தாம்பரம், பல்லாவரம், பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், மாதவரம், கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர்  உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரை மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து பூவிருந்தவல்லியில் பேரிடர் மீட்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் தீயணைப்பு, நகராட்சி துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.  

இதேபோல சோளிங்கரில் ஏரிக்கரையை பலப்படுத்தும் விதமாக 500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட தேவையான, மரம் வெட்டுவதற்கான கத்தி, மண்வெட்டி உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: