சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க யுபிஎஸ்சி. மறுப்பு : திட்டமிட்டபடி அக். 4ம் தேதி தேர்வு நடைபெறும் என உறுதி!!

டெல்லி:  அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு தேர்வாணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தேர்வை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 20 பேர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது யு.பி.எஸ்.சி.சார்பில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கடந்த மே 31ம் தேதி மற்றும் ஜூன் 5ம் தேதிகளில் தேர்வை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவையாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகளை தள்ளிவைப்பதால் காலந்தோறும் பின்பற்றப்படும் சுழற்சி முறை பாதிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சுணக்கம் ஏற்பட்டு அரசின் முக்கிய பொறுப்புகளில் அதிகாரிகளை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 60 சதவீத பேர் ஏற்கனவே ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வுகளைப்போல் சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்த அனுமதிக்குமாறு அந்த பிராமணப் பத்திரத்தில் யு.பி.எஸ்.சி. கோரியுள்ளது.

Related Stories: