சேதமடைந்த இரும்பு பட்டைகள் வெளிப்படும் அவலம்: பராமரிப்பின்றி பழுதடையும் வண்ணார்பேட்டை மேம்பாலம்

நெல்லை: நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள செல்லப்பாண்டியன் மேம்பாலம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து வருகிறது. இரும்பு பட்டைகள் உடைந்து வெளிப்படுவதோடு, மணல் குவியல் மற்றும் உடைந்து விழும் பக்கவாட்டு டைல்ஸ்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.

வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை எனப்படும் தாமிரபரணி பாய்ந்து வளம்கொழிக்கும் நெல்லை சீமையின் இதயப்பகுதியாக வண்ணார்பேட்டை திகழ்கிறது. இங்குள்ள வடக்கு - தெற்கு பைபாஸ் சாலையையும், திருவனந்தபுரம் சாலையையும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி கடப்பதற்கு வசதியாக இப்பகுதி சந்திப்பை மையமாக கொண்டு ேமம்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

அப்போதுமுதல் பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள 4 சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் இன்றி இன்றுவரை சிக்னல் உதவியின்றி நடைபெறுகிறது. மதுரை, ராஜபாளையம் மார்க்கமாக செல்லும் விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தை போக்குவரத்து தடையின்றி கடந்து செல்வதால் கீழ்பகுதியில் நெரிசல் குறைந்துள்ளது.

நெல்லை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக இந்த பாலம் மாறியுள்ளது. அதே நேரத்தில் சுமார் 10 ஆண்டுகளாகிவிட்ட இந்த பாலத்தில் ஏற்படும் பழுதுகள் தற்காலிகமாக சிறிய அளவில் சீர் செய்யப்படுகிறது. எனவே பாலத்தை முழுமையாக சீரமைத்து பராமரிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. காரணம் பாலத்தின் மேல்பகுதியில் உள்ள இணைப்புகளில் சில இடங்களில் இரும்பு பட்டைகள் உடைந்து வெளியே தெரிகின்றன. அதையொட்டிய சிமென்ட் பூச்சும் உடைந்து விட்டது. இதனால் இப்பகுதியை வாகனங்கள் வேகமாக கடக்கும் போது ஒருவித ஓசை ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள் கடக்கும்போது டயர் சேதமாகும் சூழல் உள்ளது. இதை உடனடியாக கவனித்து பராமரிக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்படுவதோடு விபத்து அபாயமும் உருவாக வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாலத்தின் மேல் சுவர் மற்றும் பக்கவாட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் பல இடங்களில் உடைந்து விழுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

அத்துடன் பாலத்தின் மையப்பகுதியில் இருந்து கீழே விடப்படும் மழைநீர் குழாய்களில் ஒரு சில குழாய்கள் பராமரிப்பின்றி உடைந்துள்ளன. இதனால் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழை நேரத்தில் சாலையில் செல்வோர் மழைநீர் அபிஷேகத்தில் நனையும் அவலமும் தொடர்கிறது. பாலத்தின் மேல்பகுதி ஓரங்களில் சில இடங்களில் மணல் குவியல் காணப்படுகிறது. இதுவும் விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

இதேபோல் பாலத்தின் கீழ் போலீஸ் கண்காணிப்பு அறை மற்றும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் அழகிய பூந்தொட்டிகள் வைத்து பராமரிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே உள்ள நீண்ட நாள் கோரிக்கையான நகர பஸ்கள் நிறுத்தப்படும் இடங்கள் அருகே பே அண்டு யூஸ் என்ற முறையிலான மினி சுகாதார வளாகம் அமைத்து பராமரிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடையே எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Related Stories: