பல கோடி ரூபாயை முடக்கிய கொரோனா: ஊரடங்கு உத்தரவால் மொய் விருந்து பாதிப்பு

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கீரமங்கலம் உள்ளிட்ட 100 கிராமங்களில் மொய் விருந்து விழா பெயர் பெற்றது. முன்னொரு காலத்தில் தனது சொந்த வீடுகளில் நடைபெறும் திருமணம், காதணி, பூப்பு நீராட்டு விழா என நடந்த விழாக்களில் சாதாரணமாக துவங்கிய மொய் வழங்கும் விழா நாளடைவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை வட்டியில்லா கடனாக மாறி முக்கிய வருமான நிகழ்வாக திருமண மண்டபங்களிலும், விழா அரங்களிலும் நடைபெறும் மொய் விருந்து விழா தற்போது 4 ஆண்டுக்கு ஒரு முறையாக மாறியது. அணி அணியாக வைக்கப்படும் விழாவில் 500 முதல் 1000 கிலோ வரை ஆட்டுக்கறி சமைத்து விருந்து வைக்கப்படும்.

சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் ஒரு நாளைக்கு 2 டன் வரை ஆட்டுக்கறி சமைக்கப்படும். அதுமட்டுமின்றி மொய் வாங்குவதை பொருத்து சமுதாயத்தில் ஒரு நபருடைய அந்தஸ்தை நிர்னயம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. 5 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக செய்து வைத்த மொய் 5 ஆண்டுகள் கழித்து தரத்துக்கு ஏற்றார் போல் 2 அல்லது 3 மடங்காக வட்டியில்லாமல் கிடைப்பதால் அந்த தொகையை முதலீடாக்கியவர்களின் குடும்பம் வளர்ச்சியை அடைந்தது. தேவையற்ற செலவுகளை செய்த குடும்பம் அழிவை தேடியது. மொய் விருந்து நிகழ்ச்சியால் வளர்ச்சியடைந்த குடும்பம் 80 சதவீதம் என்றே கூறலாம். இந்த வருமானம் 5 ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக எதிர்பார்க்கும் வருமானம். பல ஆயிரம் ரூபாய் மொய் வருமானம் என்று இருந்த நிலை நாளடைவில் பல லட்சமாக மாறி தற்போது பல கோடி என உருவெடுத்துள்ளது.

மொய் விருந்து என்பது வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி (ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) இந்த நான்கு மாதங்களில் மட்டுமே நடைபெறும். வைகாசியில் துவங்கும் மொய்விருந்து ஆவணியில் உச்சத்தை எட்டும். ஆனால் மார்ச் மாதம் துவங்கிய கொரோனா தாக்குதல் இன்று வரை உலுக்கி வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு மொய் விருந்துக்கு முட்டுக்கட்டை போட்டது. கோடிக்கணக்காள ரூபாயை முடக்கிய கொரோனா, மொய் விருந்தை நம்பி தொழில் செய்து வந்த திருமண மண்டபங்கள், விழா அரங்கங்களையும் விட்டு வைக்கவில்லை.

சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மண்டபம், விழா அரங்கங்கள் உள்ளது. ஒரு மண்டபத்துக்கு சமையலர், உணவு பரிமாறுகிறவர்கள் என மண்டபத்துக்கு ஏற்றார்போல் 20 முதல் 50 பேர் வரை வேலை செய்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் இந்தாண்டு வருமானத்தை இழந்துள்ளனர். மொய் விருந்து முடக்கத்தால் பல கோடி ரூபாய் முடங்கி பணப்புழக்கம் இல்லாமல் சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதி மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.

Related Stories: