சொத்து கேட்டு மகன் கொலை மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி தீக்குளிக்க முயற்சி

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (63). விவசாயி. இவரது மனைவி ராஜம்பொண்ணு (60). மகன் சந்திரசேகர். பாண்டியன் தம்பதி தங்களது சொத்துகளை பேரன், பேத்தி பெயரில் கடந்த 2016ல் உயில் எழுதி வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் சொத்துகளை தனது பெயரில் எழுதி வைக்கும்படி பெற்றோரை மிரட்டி வந்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோரை வீட்டிலிருந்து துரத்தியுள்ளார். இதனால் பாண்டியன் தம்பதியினர் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த வாரம் தோட்ட வீட்டிற்கு சென்ற சந்திரசேகர், தோப்பில் இருந்த 20 தென்னை மரங்களை வெட்டி சாய்த்து, பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், பெற்றோரை தாக்கியதாகவும் கூறி, அலங்காநல்லூர் போலீசில் பாண்டியன் தம்பதி புகார் செய்துள்ளனர். ஆனால், இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி, சந்திரசேகருக்கு ஆதரவாக செயல்பட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்த பாண்டியன் - ராஜம்பொண்ணு தம்பதியினர் அலுவலக வளாகத்தில், கொண்டு வந்த மண்ணெண்ணெயை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். போலீசார் இருவரையும், விசாரணைக்காக தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கொலை மிரட்டல் விடுக்கும் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில், முதிய தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: