×

கொரோனாவால் வருவாய் இழப்பு எதிரொலி : ஊழியர்கள் 28,000 பேரை பணிநீக்கம் செய்ய அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு

வாஷிங்டன்:  கொரோனா பரவல் எதிரொலியாக பார்வையாளர்கள் குறைந்துவிட்டதையடுத்து பூங்கா ஊழியர்கள் 28 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் ஃப்ளோரிடோ மாகாணங்களில் உள்ளன. இதுதவிர பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், ஜப்பானின் டோக்கியோ, சீனாவின் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களிலும் பொழுதுபோக்கு பூங்காக்கள் இருக்கின்றன. தினமும் லட்சக்கணக்கான பார்வைலாளர்கள் படையெடுக்கும் இந்த பூங்காக்கள் கொரோனா பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன.

இதனால் வருமானம் தடைப்பட்டதையடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே  ஃப்ளோரிடோவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்கா கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருகை பெருமளவு குறைந்துள்ளது. எஞ்சிய பூங்காக்களும் திறக்கப்படாததால் டிஸ்னி நிறுவனம் பலகோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நிலைமையை சமாளிக்கும் வகையில் உலகம் முழுவதும் தமது பூங்காக்களில் வேலை செய்து வரும் ஊழியர்களில் 28 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி முடிவு செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.

Tags : Corona ,Walt Disney Company ,America , Corona, loss of revenue, echo, employees 2, layoff, USA, Walt Disney, company
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...