திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை  தொகுதிகளில் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்பதால், தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படாது,’ என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதோடு, பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பீகாரில் காலியாக உளள ஒரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது பற்றி அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளில் சூழல் நன்றாக இல்லாததால், இப்போதைக்கு அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது. அதேபோல், அசாம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காலியாக 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது,’ என கூறப்பட்டுள்ளது.  தங்கள் மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் உள்ளதாக, தேர்தல் ஆணையத்துக்கு இம்மாநில அரசுகள் கடிதம் எழுதி இருந்தன. அதன் அடிப்படையில்தான், தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்தும் முடிவை தேர்தல் ஆணையம் கைவிட்டுள்ளது.

நவ.3,7ல் 56 தொகுதிக்கு இடைத்தேர்தல்

குஜராத், சண்டிகர், கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 56 சட்டமன்றம் மற்றும் பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் நவம்பர் 3, 7ம் தேதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும். 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: