அமைந்தகரையில் தாதா போட்டியில் ரவுடிகள் மோதல்: 4 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கணேஷ் (எ) லிங்கம்(29). அதே பகுதியை சேர்ந்த ரவுடி உஷ் (எ) சந்திரசேகர்(26). சமீபகாலமாக இருவருக்கும் இடையே ‘யார் தாதா’ என்ற போட்டி நிலவி வந்தது. இதன் காரணமாக 2 கோஷ்டிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.   இந்நிலையில், கடந்த 26ம் தேதி அமைந்தகரை, பகவதியம்மன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் ரவுடிகள் கணேஷ்(29), சந்திரசேகர்(27), நிலேஷ்(18), விஸ்வா(18), வச்சா (எ) பிரகாஷ்(21), பிரகாஷ்(19) ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். குடிபோதையில் இருந்த ரவுடி கணேசுக்கும், சந்திரசேகருக்கும் இடையே `யார் தாதா’ என்பது தொடர்பாக  வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே அடிதடி உருவானது. இதில் ரவுடி சந்திரசேகருடன் வந்த நிலேஷ், விஸ்வா, பிரகாஷ், வச்சா (எ) பிரகாஷ் ஆகியோர் 5 பேரும் ரவுடி கணேசை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவுடி கணேசை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரவுடி கணேஷ் அளித்த புகாரின்பேரில் அமைந்தகரை போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 5 ரவுடிகள் குறித்து விசாரித்தனர்.

இதற்கிடையில், தலைமறைவான 5 ரவுடிகளும் அமைந்தகரை, கதிர்வேல் காலனியில் பதுங்கியிருப்பதாக நேற்று முன்தினம் இரவு  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று, மது அருந்தி கொண்டிருந்த ரவுடி உஷ் (எ) சந்திரசேகர், நிலேஷ், பிரகாஷ், விஷ்வா ஆகிய 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.  விசாரணையில், `யார் தாதா’ என்ற போட்டியில் ரவுடி கணேசை வெட்டி கொல்ல முயன்றதாக என 4 பேரும் வாக்குமூலம் அளித்தனர். மேலும், ரவுடி உஷ் (எ) சந்திரசேகர் மீது சென்னை நகர காவல் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: