கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி: கணவன் போலீசில் சரண்

புழல்: செங்குன்றம் பொதுப்பணித் துறை  ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் முருகன் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகன்யா (26). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். சுகன்யாவுக்கும்,  நாரவாரிகுப்பத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த முருகன், மனைவியை கண்டித்துள்ளார். இதையொட்டி கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சுகன்யா, கணவரை பிரிந்து சென்று கள்ளக்காதலன் பாண்டியுடன்  செங்குன்றம் அடுத்த  எடப்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை முருகன், மனைவியை பார்க்க சென்றார்.

அங்கு அவரை சமாதானம் செய்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். அதன்பேரில், 2 பேரும் ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டனர். செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் கோனிமேடு - பொத்தூர் செல்லும் சாலையில் வந்தபோது, ஆட்டோவை சாலையோரமாக முருகன் நிறுத்தினார். பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால், மனைவி சுகன்யா கழுத்தை அறுத்தார். வலியால் துடித்த சுகன்யாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். உடனே முருகன், மனைவியை  மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என கூறி ஆட்டோவில் ஏற்றி சென்று, புழல் ஏரி அருகே நடுவழியில் இறக்கிவிட்டு சென்றார்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள், செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுகன்யாவை மீட்டு,  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் முருகன், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதாக, செங்குன்றம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பாப்பன்குப்பத்தை சேர்ந்தவர்கள் சேகர் (38), சுரேஷ் (36). நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே 2 பேரும் நடந்து சென்றனர். அப்போது, அங்கு வந்த 3 பேர், அவர்களை மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

புகாரின்படி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கண்டிகை கிராமத்தை ஞானசேகர் (21), கிருஷ்ணா (23), கிரண் (24) என தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சியில் மதுபாட்டில்களை கொடுக்கல் வாங்கலின்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் முன்விரோதம் காரணமாக வெட்டியதாக அவர்கள் கூறினர். இதையடுத்து போலீசார், 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அயத்தூர்  இஎஸ்என் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். அம்பத்தூரில் கம்பெனி நடத்தி வருகிறார்.

 இவரது மனைவி சசிகலா (35). நேற்று காலை வெங்கடேசன்,  தொழிற்சாலைக்கு சென்று விட்டார். சசிகலா, சுமார் 11.30 மணியளவில் வேப்பம்பட்டில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். அங்கிருந்து மீண்டும் 12.50 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 26.5 சவரன் நகை, லேப்டாப்  ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. * கடம்பத்தூர் சக்தி நகரில் வசிப்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்.

தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 27ம் தேதி சுரேஷ், சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றார். நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 5 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ₹2500 ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரிந்தது. மேற்கண்ட சம்பவங்கள் குறித்து செவ்வாப்பேட்டை மற்றும் கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். * திருவள்ளூர் அடுத்த கவுடிபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் கிப்சன் (11). 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் கிப்சன், திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.

அப்போது, செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன், சம்பவ இடத்திலேயே இறந்தான். புகாரின்படி புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியேடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: