கிராம நிர்வாக அலுவலருக்கு சரமாரி அடி: ஒருவர் கைது : கூட்டாளிக்கு வலை

புழல்: சோழவரத்தில் கிராம நிர்வாக அலுவலர், அவரது உதவியாளரை, சரமாரியாக தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் தேவராஜ் (30). சோழவரம் ஒன்றியம், செம்புலிவரம் சிறுணியம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது உதவியாளர் குமார் (35). மாற்றுத் திறனாளி. நேற்று முன்தினம் இருவரும் அலுவலகத்தில், பணியில் ஈடுபட்டனர். மாலை சுமார் 3 மணியளவில், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் சான்றிதழ் குறித்து பேசி கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், சோழவரம், பெரிய காலனியை சேர்ந்த நாகராஜ் (40), கார்த்திக் (42) ஆகியோர் அங்கு சென்று, அந்த பெண்ணிடம் தகராறு செய்தனர். இதை தட்டிக் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ், உதவியாளர் குமார் ஆகியோரை, சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், அங்கிருந்த பதிவேடுகளை கலைத்து வீசி எரிந்துவிட்டு தப்பினர். புகாரின்படி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த நாகராஜை, நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவான கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: