ரூ.4.25 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர்கள் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.4.25 கோடி மோசடி செய்த வழக்கில், வங்கி மேலாளர்கள் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் அனுராக் ஜெயின். இவர், நேஷனல் மெடிசின்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் 2007ம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ.4.25 கோடி கடனை முறைகேடாக பெற்றதாக புகார் எழுந்தது. இந்த முறைகேட்டுக்கு ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி மேலாளர் பார்வதி ராமகிருஷ்ணன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் கண்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அனுராக் மற்றும் அவர் நடத்தி வந்த நிறுவனத்தின் இயக்குனர் மஞ்சுளா, வங்கி மேலாளர்கள் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஜவகர் முன்பு நடந்து வந்தது. வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, அனுராக் ஜெயின் மற்றும் வங்கி மேலாளர்கள் என 4 பேர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அனுராக் ஜெயினுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும், கண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதம், மஞ்சுளாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், பார்வதி ராமகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அனுராக் ஜெயின் நடத்தி வந்த நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: