விவசாயிகளுக்கு செய்த துரோகத்துக்கு முதல்வர் பிராயசித்தம் தேட வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: விவசாயச் சட்டங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து விவசாயிகளுக்கு செய்த துரோகத்துக்கு முதல்வர், பிராயசித்தம் தேட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளது. தமிழகத்தில் 70 மாவட்டங்களில் 3500 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பங்கேற்று மாபெரும் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். விவசாயச் சட்டங்களை வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்று பாஜ கூறுகிறது.

அதேசமயம், 3 விவசாயச் சட்டங்களைப் பல மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. மத்திய அரசின் சட்ட வரம்புக்குள் தலையிடாமல், மாநில வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. அவசரச் சட்டங்களாகவே இருக்கும் மத்திய சட்டப் பிரிவுகள் சிலவற்றை ரத்து செய்தும் ராஜஸ்தான் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சட்டம் அல்லது துணைச் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையைத் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் ஏற்று, ராஜஸ்தானைப் போல், மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதன்மூலம், விவசாயச் சட்டங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்ததற்கு, பிராயச்சித்தம் தேடியதாகவும் இருக்கும் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

Related Stories: