×

ஊர் முழுக்க ஊழல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி சிபிஐ நடவடிக்கைகளை பிசுபிசுக்க வைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: ஊழல் ஊழல் என்று ஊர் முழுக்க பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அதிமுக அரசை கட்டிக்காப்பாற்றுவது, பாதுகாத்து நிற்பது, சிபிஐ மற்றும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை பிசுபிசுக்க வைப்பது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சேகர் ரெட்டிக்கு எதிரான 247.13 கோடி ரூபாய் ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை என்று, அதிமுக செயற்குழு நடைபெற்ற நேற்றைய முன்தினம் சிபிஐ நீதிமன்றத்தில் கூறி, அந்த வழக்கை முடித்து வைத்து மத்திய பாஜ அரசு ஒரு ‘சிறப்புப் பரிசை’ அதிமுகவிற்கு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

‘துண்டு சீட்டை’ வைத்து ‘துப்புத் துலக்கும்’ ஆற்றல் படைத்த சிபிஐ அமைப்பிற்கு, 170 பேருக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்த பிறகும், 800க்கும் மேற்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த பிறகும், ‘ஆதாரம்’ கிடைக்கவில்லை; 2000 ரூபாய் புதிய நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வங்கி அதிகாரியைக் கூட வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கவில்லை என்று உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு ஒரு விசாரணையை நடத்தி, இப்படியொரு சிறப்புப் பரிசு கிடைத்திருக்கிறது என்றால், இந்தப் பரிசை வழங்கியது சிபிஐ என்ற அமைப்பு என்பதை விட, மத்திய பாஜ  அரசுதான் என்று அடித்துச் சொல்ல முடியும்.

முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நெருக்கமான சேகர் ரெட்டி வழக்கில் மட்டும்தான், “வங்கிகள் கொடுத்த நோட்டுகளுக்கு சீரியல் நம்பரைக் கண்டுபிடிக்க முடியாத” அதிசயம் நடந்திருக்கும். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் அலுவலகத்திலேயே ரெய்டு நடத்தப்பட்டது. அவர் வீடும் ரெய்டுக்குள்ளானது. ஆனாலும் அவர் காப்பாற்றப்பட்டார். ஏனென்றால் “இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்” ஆகிய இருவருக்கும், அதிமுகவின் ஊழல்களுக்கும் தானே மத்திய பாஜ அரசு ‘உற்ற தோழனாக’ நின்று, உரிமை மிக்க தோழனாக, கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறது.  

அடுத்தது “குட்கா டைரி” ஊழல் வழக்கு ஊழலில்  இடம்பெற்றிருந்த அமைச்சரே விடுவிக்கப்பட்டார். ராமமோகனராவும் விடுவிக்கப்பட்டார். ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில், 80 கோடி ரூபாய்க்கு மேல் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் பட்டியல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்டது; தேர்தலே ரத்து செய்யப்பட்டது. அந்த ஊழல் பட்டியலை, தேர்தல் ஆணையம் சிபிஐக்கு அனுப்பவில்லை. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கைப்பற்றப்பட்டதாக-16 மாதங்களுக்குப் பிறகு சிபிஐயிடம் புகாரைக் கொடுத்துள்ள தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ- இந்த அளவுகோலை, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் ஏன் கடைப்பிடிக்கவில்லை? இதில் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் போடும் சி.பி.ஐ. ஏன் சேகர் ரெட்டி விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் போடவில்லை? இதுதான் அ.தி.மு.க.விற்கும்- பா.ஜ.க.விற்கும் உள்ள ஊழல் கூட்டணி ரகசியம்.  

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தமிழக ஆளுநரிடம் கொடுத்த ஊழல் புகார்கள் எல்லாம் மூட்டை கட்டி வைக்கப்பட்டு; தூசு படிந்து விட்டது. 100 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட முதல்வர் பழனிசாமியின் துறையான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர் செய்யாத்துரை நாகராஜன் மீதான வருமான வரித்துறை ரெய்டு-அவருக்கும் துறை அமைச்சருக்கும் உள்ள ஊழல் தொடர்புகளை, இன்னும் வருமான வரித்துறை வெளியிலும் விடவில்லை; துறை அமைச்சரும் பொது ஊழியர்தானே என்று அதை சி.பி.ஐ. விசாரணைக்கும் அனுப்பியதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் அதிமுகவுடன் 2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் வைத்த கூட்டணிக்காகவும்-இனி 2021-ல் அ.தி.மு.க.வுடன் வைக்கும் கூட்டணிக்காகவும் - “விரும்பிய எண்ணிக்கையில் இடங்களைப் பெறுவதற்கும்” தான், இருவருக்கும் இடையில் வெளிப்படையான இந்த “ஊழல் பாதுகாப்பு ஒப்பந்தமா”?.

மத்திய பா.ஜ. அரசின் மக்கள் விரோதத் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்தி-விவசாயிகளை வஞ்சித்திட இந்த ஒப்பந்தமா?ஊழல் ஊழல்... என்று ஊர் முழுக்க பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திரமோடி, “ஊழல் பெருச்சாளிகளான” முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக அரசை கட்டிக் காப்பாற்றுவது-பாதுகாத்து நிற்பது-சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை பிசுபிசுக்க வைப்பது ஏன்? ஏன்?-இந்தக் கேள்வியைத் தமிழ்நாடே ஒன்றிணைந்து கேட்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு  உரிய உண்மையான பதிலைச் சொல்வாரா? துண்டு சீட்டை வைத்து துப்புத் துலக்கும் ஆற்றல் படைத்த சிபிஐ அமைப்பிற்கு, 170 பேருக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்த பிறகும் ஆதாரம் கிடைக்கவில்லை.

Tags : Modi ,city ,MK Stalin ,CBI , Why is Prime Minister Modi, who has been campaigning corruption all over the city, keeping the CBI operations afloat? MK Stalin's question
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...