ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் ஆதரவு: வைத்திலிங்கம் எம்பி பேட்டி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளதாக வைத்திலிங்கம் எம்பி கூறினார். அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவாதத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே வார்த்தை போர் நடந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் வழக்கம்போல ஊரங்கு தொடர்பான கூட்டங்களில் முதல்வருடன் சேர்ந்து ஓபிஎஸ்சும் பங்கேற்பார். ஆனால் தலைமை செயலகத்துக்கு செல்லாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 10.30 மணிக்கு தனது ஆதரவாளர்களான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள்  கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

கூட்டத்துக்கு பிறகு வைத்திலிங்கம் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் நான் ஆதரவு தெரிவித்துள்ளேன். அதிமுக செயற்குழுவில் நடந்த விவாதம் கட்சி வளர்ச்சிக்கானது. 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை தக்க வைப்பதே எங்களது குறிக்கோள். ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கே.பி.முனுசாமி எம்பி நிருபர்களிடம் கூறும்போது, “கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளருடன் ஆலோசனை நடத்தி விட்டு வந்திருக்கிறேன். இது தொடர்ச்சியாக கட்சி பணியில் நடக்கும் ஒரு நிகழ்வுதான். வேறு எதுவும் இல்லை” என்றார்.

Related Stories: