அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் விஸ்வரூபம்: ஓ.பி.எஸ்.-ஐ சந்தித்த பிறகு முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆர்.பி.உதயகுமார் பேச்சு

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தில் வருகிற 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், `ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால், அதிமுகவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டது.

மூத்த அமைச்சர்கள் சமரசத்தையடுத்து, அதிமுகவில் யாரும் இனி முதல்வர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 18ம் தேதி அதிமுக அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் சென்னையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திலும், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் நேரடியாக வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வருகிற 28ம் தேதி (நேற்று) அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டது.  இதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் கூட்டத்திலும் மருத்துவர்கள் ஆலோசனைக்கூட்டத்திலும் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். ஆனால் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் வேலுமணி திடீரென சந்தித்தார்.

இதையடுத்து முதலமைச்சருடன் நத்தம் விஸ்வநாதன் சந்தித்து பேசி வருகிறார். இதனிடையே துணை முதல்வர் ஒபிஎஸ்சை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசி வருகிறார். ஒபிஎஸ்சை தொடர்ந்து தற்போது ஆர்.பி.உதயகுமார் முதல்வரை சந்தித்து பேசி வருகிறார்.

Related Stories: