புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் இதயத்தை நேரடியாக கத்தியால் குத்துவதற்கு இணையானது: ராகுல் காந்தி

டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் இதயத்தை நேரடியாக கத்தியால் குத்துவதற்கு இணையானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் கூட்டத்திலேயே வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு  உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த மசோதாக்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் 3 மசோதாக்களையும் மத்திய அரசு எளிதாக  நிறைவேற்றியது. பின்னர், மாநிலங்களவையில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவை தனியாகவும், மற்ற இரு மசோதாக்களை தனியாகவும் மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.

தொடர்ந்து, 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசிதழ் வெளியிடப்பட்டது. இதன் மூலம், 3 மசோதாக்களும் சட்டமாக அமலுக்கு வந்துள்ளன. எஞ்சியிருந்த கடைசி வாய்ப்பும்  பறிபோய், சர்ச்சைக்குரிய 3 மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் இணைய வழியில் பேசினார்.

அப்போது; புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளின் நலன்களுக்காக மட்டுமல்ல; நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை பாதுகாக்கவே புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறோம். சரக்கு மற்றும் சேவை வரிக்கும், புதிய வேளாண் சட்டங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் இதயத்தை நேரடியாக கத்தியால் குத்துவதற்கு இணையானது என கூறினார்.

Related Stories: