அமெரிக்காவில் மூளையை உண்ணும் அரிதான அமீபாவால் ஆபத்து!..டெக்ஸாஸ் மாகாணத்தில் 6 வயது சிறுவன் பலி...!

வாஷிங்டன்:  அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மூலையை சாப்பிடும் அமீபாவால் சிறுவன் உயிரிழந்ததையடுத்து அங்கு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரஸோரியா கவுண்டியை சேர்ந்த 6 வயது சிறுவன் மூளையை சாப்பிடும் நெக்லேரியா ஃபவுலேரி என்ற அமீபாவால் கடந்த 8ம் தேதி உயிரிழந்தான். முதலில் சிறுவனின் வீட்டில் இருந்த குழாய்களிலும், பின்னர் நகரின் மையத்திலிருந்த செயற்கை நீரூற்று உள்ளிட்ட இடங்களிலும் அமீபா இருக்கும் தடையங்கள் கிடைத்தன. இதையடுத்து பிரஸோரியா கவுண்டிக்கு குடிநீர் ஆதாரமான ஜாக்சன் ஏரி நீரை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் தண்ணீரை காயவைத்து குடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஒற்றை செல் நுண்ணுயிரியான நெக்லேரியா ஃ பவுலேரி அமீபா தண்ணீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த அமீபாவால் பாதிப்பு நிகழ்கிறது. இந்த வகை அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்தில் இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். மூக்கின் வழியாக மனித உடலுக்குள் நுழையும் இந்த அமீபா மூளைக்கு சென்று உயிரிழப்பை ஏற்படுத்தி விடும். பெரும்பாலும் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரத்தில் உயிரிழந்துவிடுவார்கள்.

இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது. இது அரிதாகவே தொற்றும் என்றாலும், பிரஸோரியாவில் 1962ம் ஆண்டில் இருந்து 37 பேர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அமீபா தாக்கினால் 97 சதவீத உயிரிழப்பு ஏற்படும் என்பதால் பிரஸோரியா கவுண்டியை பேரிடர் பகுதியாக டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் அறிவித்திருக்கிறார். கொரோனா பேரிடருக்கு மத்தியில் இவை பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திருக்கிறது.

Related Stories: