×

மெஹபூபா முப்தியை எத்தனை நாள் காவலில் வைக்க போகிறீர்கள்: ஒரு வாரத்தில் பதிலளிப்பதாக காஷ்மீர் அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்.!!!

டெல்லி: மெஹபூபா முப்தியை இன்னும் எத்தனை நாட்கள் காவலில் வைக்க போகிறீர்கள் என்பது குறித்து 1 வாரத்தில் தெரிவிக்கப்படும் என காஷ்மீர் அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து  கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நீக்கப்பட்டது. இதனை அடுத்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின்  தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜம்மு - காஷ்மீரின் முன்னணி தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹாபூபா மீதான நடவடிக்கை  தொடர்ந்து நீடிப்பதால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மெஹாபூபா முப்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அவரை தொடர்ந்து காவலில் வைப்பதாக குற்றம்சாட்டிய அவரது மகள் இல்திஜா முப்தி, ஒரு முக்கியமான எதிர்க்கட்சி தலைவரை விசாரணை  ஏதும் இல்லாமல் ஓராண்டுக்கு மேலாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து அடைத்து வைத்துள்ளதாகவும், அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மெஹாபூபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். மெகபூபா முப்தியை  விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் கடந்த 24-ம் தேதி இல்திஜா முப்தி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் ஹரிகேஷ்ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இல்திஜா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன்,  குடும்பத்தினரை சந்திக்க மெகபூபா முப்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி கவுல் கூறுகையில், மெகபூபா முப்தியை இன்னும் எத்தனை நாள் தடுப்பு காவலில் வைக்க போகிறீர்கள். எந்த உத்தரவின் கீழ் அவர் காவலில் உள்ளார். தடுப்பு காவலில் எத்தனை நாள் வைக்க முடியும். ஒரு  வருடத்தை தாண்டி அதனை நீட்டிக்க முடியுமா? எனக்கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, காஷ்மீர் மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கு குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என  தெரிவித்ததையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Mehbooba Mufti , How long are you going to detain Mehbooba Mufti: Kashmir High Court informs that he will respond in a week !!!
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில்...