இரட்டை இலைச் சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு 2 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.!!!

டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இரு அணிகளும் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரின. அடுத்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்தநிலையில், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, டிடிவி தினகரன் தரப்பில் பெரிய தொகை பேசப்பட்டதாகவும், இதற்காக இடைத்தரகர் மூலம் முன்பணம் கைமாறியதாகவும் டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த டெல்லி குற்றவியல் போலீசாரின் தேடுதல் வேட்டையில், பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் சிக்கினார். ஓட்டல் அறை ஒன்றில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர், அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர். இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன் பணமாக ரூ.1.30 கோடியை டிடிவி தினகரன் கொடுத்ததாகவும் சுகேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் டி.டி.வி.தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது.

Related Stories: