சென்னை மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!!

சென்னை:  சென்னை மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மீனவ நல அமைப்பின் பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். அந்த வழக்கில் மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பது மற்றும் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியை முறைப்படுத்துவது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, கிருஷ்ண ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் படிப்படியாக நிபந்தனைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுமக்கள் இன்னும் மெரினாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க உள்ளதாகவும் கூறினார்.

இதனை கேட்ட நீதிபதிகள், கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர இயலாது என்றும் அதே நேரத்தில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன  என்பதை அக்டோபர் 5-ம் தேதி தெரிவிக்க உத்தரவிட்டுள்ளனர்.மேலும் மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: